சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்தார். அவரைத் தேடி மீட்புக் குழுவினர் விரைந்தனர்.
சுவிட்சர்லாந்திலுள்ள Lidairdes என்ற பகுதியில் பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார் ஒருவர். அப்போது பனிப்பாறைச் சரிவில் அவர் சிக்கிக்கொண்டார்.அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மீட்புக்குழுவினரின் உதவியை நாட, மீட்புக் குழுவினர் அவரது குடும்பத்தினர் கூறிய இடத்துக்கு விரைந்துள்ளனர். நல்லவேளையாக அவர் தான் செல்லும் பாதை குறித்து தன் குடும்பத்தினரிடம் முன்னரே தெரிவித்துள்ளார்.
அதன்படி மீட்புக்குழுவினர் அவரைத் தேடிச் சென்றபோது, ஹெலிகொப்டர் பாய்ச்சிய ஒளியில், பனிப்பாறைச் சரிவில் சிக்கிப் புதைந்த அந்த நபர் தன் கையை மட்டும் பனியிலிருந்து விடுவித்துக்கொண்டு அசைப்பதை மீட்புக் குழுவில் ஒருவர் கவனித்துள்ளார்.உடனடியாக பனியை அகற்றி அவரை மீட்ட மீட்புக்குழுவினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அந்த நபர் தன் கையை மட்டும் பனியிலிருந்து விடுவித்துக்கொண்டு அசைக்கும் காட்சியை மீட்புக்குழுவினரில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, அந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.ஆச்சரியம் என்னவென்றால், பெரிய பிரச்சினை எதுவும் இன்றி அவர் உயிர் பிழைத்துக்கொண்டார் என்பதுதான். இந்த தகவலை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.